Sunday, July 20, 2014

குசேலன்

எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன்.  ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம்.  புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.  (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும்.  Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று.  Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது.  இவை முக்கியமான மாற்றங்கள்.)

நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்:
  • அதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன.
  • மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும்.
  • புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது.  கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது.  இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன.  காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக்க முடியும்.
  • இரவில் தூக்கமில்லாது இருக்கும்போது வரும் எண்ணங்கள்தாம் எத்தனை அபாயகரமானவை.  ஒருவனைத் தன்னையே முற்றிலும் மறுதலிக்க வைப்பவை.  எதிரியினுடைய எண்ணங்கள் ஏதோ மந்திரசக்தியால் தனக்குள் குடியேறியதுபோல.
  • ஸ்டாலின் சொன்னது மாதிரி ஒரு மனிதர் செத்தா அது துக்கம்.  ஒரு கோடி பேர் செத்தா அது புள்ளி விவரம்.  உண்மைதான் தோழர், ஒரு கோடி துக்கம்னு அதைப் பிரிச்சுப் பாக்க ஆரம்பிச்சா இந்த பூமி துக்கம் தாளாம வெடிச்சிடும்.
  • மனம் பெரிய கல்குண்டு போல கனத்தது.  இறக்கி வைக்க முடியாத பாரம்.  ஏதாவது பேச வேண்டும்.  பேசாதபோது மனதை அணுவணுவாக சுமக்க வேண்டியுள்ளது.  பேச்சு மனதை ஒலியாலான ஒரு திரையால் மூடிவிடுகிறது.
  • மனுஷ மனசில அகங்கார வெஷம் ஏறிப்போன பிறகு மருந்து இல்ல.  தானா பழுத்து எறங்கித் தணியணும் கேட்டுதா?
  • ஒருவேளை அந்தரங்கமான எண்ணங்களெல்லாம் சுயமையம் கொண்ட, அபத்தமான எண்ணங்களாகவே இருக்கும் போலும்.
  • உயிரோடு இருக்கிறவங்களுக்கு இறந்து போனவங்களுக்க கிட்ட ஒரு கடன் இருக்கு.  அவங்க செய்த தியாகங்கள் மேலதான் நம்ம வாழ்க்கை.  அவங்க விதைச்சதை நாம அறுவடை செய்றோம்.
  • ஆம்பிளயளுக்கு என்னமாம் ஒண்ணு இருக்கும் எப்பமும், துரத்திப் பிடிக்கிறதுக்கு.  அதில் உள்ள ஜெயம்தான் அவியளுக்கு முக்கியம்.  பெண்டுபிள்ளியள் அதுக்குப் பிறவுதான்.
  • தன் சொந்தக் குடிமக்கள் மேல வன்முறையப் பிரயோகிக்காத, அவங்களில ஒரு பகுதியை ஒடுக்காத, ஒரு அரசாங்கம் சாத்தியமே இல்லை.
  • எந்த ஒரு சமூகமும் இறந்தகாலத்தை முழுக்க நிராகரிக்கிறதில்லை.  அப்படியே ஏத்துக்கிறதுமில்லை.  தன் நிகழ்காலத் தேவைக்காக வரலாற்றை வேகவச்சு, உலர்த்தி, தூளாக்கி, தனித்தனி பாட்டில்களில் அடைச்சு, பத்திரமா பாதுகாக்குது.  வரலாறு சமூகத்துக்குக் குறியீடுகளின் களஞ்சியம்; அவ்வளவுதான்.
  • பொதுமக்களுக்கு அறிவாளிகளையல்ல, வீரர்களையே வேண்டும்.
  • பொதுமக்களுக்கு அறிவாளிகள் மீது பயம்.  தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம்.  தங்களைவிட வித்தியாசமானவனாக இருக்கிறான் என்ற பயம்.  சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும், சில சமயம் ஏளனமாகவும், சில சமயம் மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.
  • ஆண்களின் பதவியோ, அழகோ, பணமோ, பெண்களை அதிகம் மயக்குவதில்லை.  பேச்சுதான்.  பேசிப்பேசியே ஒருவன் ஒரு பெண்ணின் கண்ணில் மன்மதனாகவும் நவாப் ஆகவும் மாறிவிட முடியும்.
  • எத்தனை தீவிரமான துக்கமாக இருப்பினும் ஒருவர் அழ ஆரம்பிக்கும்போது சற்று கோமாளி ஆகிவிடுகிறார்.  அழுகை நம்மை அவரிடமிருந்து உடனடியாக விலக்கி விடுகிறது.
  • காமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல.  நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஊர்தி அது.  அதில் வேகமூட்டி உண்டு.  ஆனால் நிறுத்தக்கருவி இல்லை.  எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும்.
  • காவிய முடிவுகள் காவியங்களுக்கு வெளியே ஒருபோதும் சாத்தியமாவதில்லை.  எனவேதான் காவியங்களின் தீவிரமோ முழுமையோ ஒழுங்கோ இல்லாமல் வாழ்க்கை வெளிறிக்கிடக்கிறது போலும்.  வாழ்வின் இந்தக் கூசிக் குறுக வைக்கும் அர்த்தமின்மையிலிருந்து தப்பி இளைப்பாறும் பொருட்டு மனிதன் உருவாக்கிக்கொண்டவையே காவியங்கள்.
  • குற்றவுணர்விலிருந்து எழும் கோபம் தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கும் முன்னிலை மனிதர்மீதுதான் உடைத்துப் பாயும்.
  • அர்த்தமற்றதும் உத்வேகம் நிரம்பியதுமான வெற்றுச் சொற்கள் தரும் மெய்மையின் தரிசனத்தை ஒழுங்குள்ள தருக்கம் ஒருபோதும் தருவதில்லை.
  • என் அனுபவத்தில் பசியை வெல்ல மிகச்சிறந்த வழி காமம் சார்ந்த பகற்கனவுகளில் அமிழ்வதும், உடல் சோர்ந்து நரம்புகள் வலிக்கும் வரை சுயபோகம் செய்வதும்தான்.
  • பசியின் மிகப் பெரிய கொடுமை நாம் வேறு எதைப்பற்றியும் உண்மையில் யோசிக்க முடியாது என்பதே.  அதன் முன் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம்.  ஆனால் அனைத்துமே அதற்கு எதிரான பாவனைகளாகவே இருக்கும்.
  • மனிதர்கள் அழுவதும் கோபம் கொள்வதும் எப்போதும் ஓர் இடைவெளியை நிரப்பத்தான்.  பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையேயான இடைவெளி.  சகலவிதமான பேச்சுகளும் தருக்கங்களும் நடப்பது அந்த வராண்டாவில் வைத்துதான்.
  • அகந்தையேகருணையின் விளைநிலம்.
  • குடிக்காமலிருப்பவர்கள் அறிவதில்லை நான் குடிக்காத போதும் குடிகாரன்தான் என.  குடிக்காமலிருக்கும் குடிகாரன்.  அவ்வளவுதான் வித்தியாசம்.
  • ஓர் இலக்கிய விமரிசகனாக வாழ்வைப் பார்க்கும்போது இப்படிச் சொல்லத் தோன்றுகிறது.  மிகமிக நீர்த்துப்போன படைப்பு.  தொண்ணூறு சதத்தை வெட்டி நீக்கிவிடவும்.  மிஞ்சியதில் சிற்சில பக்கங்கள் மட்டுமே முக்கியமானவை.  சில வரிகளில் மட்டுமே உத்வேகம் கூடியிருக்கிறது.
  • சூதாடியின் வாழ்வின் ஒரு கணத்தின் பாரத்தை சம்சாரி தாங்கமாட்டான்.  அவன் முதுகெலும்பு முறிந்துவிடும்.
  • ஆளுமை என்பது ஒரு எதிர்வினை மட்டுமே என்று அறிந்ததே தல்ஸ்தோயின் மெய்ஞானம்.  (ஆளுமை = personality; எதிர்வினை = reaction)
  • அச்சமில்லாத குதூகலம் முழுமையானதல்ல.
  • வெள்ளங்கள் வடியும், இளம்தோழரே.  இளமையில் அதை நாம் அறிவதில்லை.
  • அதிகாரமுள்ள கோழை மிகமிக ஆபத்தானவன்.
  • மனிதனுக்கு மனிதநாடகத்தில் எப்படியாவது பங்கெடுத்தாக வேண்டியுள்ளது.
  • எந்த நிலையிலும் மனிதனுக்கு எதிர்காலம் தேவையாக ஆகிறது.  தற்கொலைக்கு முந்தைய கணத்தில்கூட.
  • சமரசம் செய்துகொள்வதற்கு மிக அவசியமானது உரிய நியாயங்களைக் கண்டுபிடிக்கும் தருக்கத்திறன்.  எனவேதான் அறிஞர்களும் மேதைகளும் எளிதாக சமரசம் செய்துகொள்கிறார்கள்.
  • இளமைப்பருவ நினைவுகள் மனிதனிடமிருந்து பறிக்கவே முடியாத சொத்து.  அவை இருப்பது வரை மனிதர்கள் எங்கும் வாழ்ந்துவிட முடியும்.
  • நீதி என்பது ஒரு நடைமுறை அல்ல; ஒர் ஒழுங்கு அல்ல, ஒரு நம்பிக்கை அல்ல.  நீதி என்பது ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்துகொள்ள முடியாத ஓர் உணர்வு.
  • வரலாற்றில்தான் எத்தனை மாமனிதர்கள், தியாகிகள், புனிதர்கள்.  அவர்களையெல்லாம் புத்தகங்களாகவும் சிலைகளாகவும் மாற்றி அலமாரியில் வைத்துவிட்டுத்தான் மனிதர்கள் பூமியில் வாழ முடிகிறது.
  • அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்துகொண்டவர்கள்.
  • நரகத்தில் கொடும் துயரங்கள் உண்டு குழந்தை.  அதனால் அங்கு இறைவனும் இருப்பார்.  சொர்க்கத்தில் எல்லாவிதமான போகங்களும் உண்டு.  அங்கு சாத்தான் அப்போகங்கள் மீது நின்று பிரசங்கம் செய்வான்.  நீ எங்கே போக விரும்புகிறாய்?
  • ஞானமென்பது இதுதான்.  கற்சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச் சுவர்களாக மாற, உலகம் வெட்டவெளியாகும் நிலை.  அவ்வெட்டவெளியின் நடுவே தனிமையின் சிறையில் நாம் அடைபடுகிறோம்.
  • எப்போராட்டத்திலும் மிகப்பெரிய சக்தி நமது பக்கத்து நியாயத்தின்மீதான ஆழ்ந்த நம்பிக்கையேயாகும்.
  • உரிமைப் போராட்டம் எந்நிலையிலும் மீற முடியாத எல்லை ஒன்று உண்டு.  எந்த உரிமையை அடையும் பொருட்டு அது போராடுகிறதோ அந்த உரிமையை அது ஒருபோதும் பிறருக்கு, தன் எதிரிக்குக்கூட, மறுக்க முடியாது.
  • தருக்கபூர்வமானதெல்லாம் உண்மையென்றும், உரிய காரணங்கள் உடையதெல்லாம் நியாயம் என்றும் நம்புவதே அறிவைப் பேதைமையின் உச்சமாக ஆக்குகிறது.
  • இந்தப் பூமியில் பெரும் அநீதி நிகழாத கணம் ஒன்று இல்லை.  ஆனால் இன்னமும் அநீதியை இங்கு நியாயப்படுத்த முடியவில்லை.
  • பிறிதொருவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தன்னுயிரைத் தரத் தயாராயாகும் கோடானுகோடிப் புனிதமூடர்கள் இன்னும் இப்பூமியில் உள்ளனர்.  அவர்களுக்காகவே இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது.
  • கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன.
  • சித்தாந்தம்கிறது வரலாறு நோக்கி மனித மனம் விரியறதனால பிறக்கிறது இல்லை.  தன்னகங்காரம் நோக்கி சுருங்கிறதனால பிறக்கிறது.  எல்லா சித்தாந்தங்களும் ஒரு உண்மையை ஊதிப்பெருக்கி, மறு உண்மையை மிதிச்சு மண்ணுக்குள்ள அழுத்தித்தான் உண்டாக்கப்படுது.
  • “நீங்களும் சரி, அவுகளும் சரி.  மௌனமா இருக்கிறதுதான் உத்தமம்னு ஆயிரம் பக்கத்துக்கு புஸ்தகம் எழுதுவீக.  எனக்கு ஒண்ணும் புரியலை.”  “தெளிவு படுத்திக்கணும்ல?”  “பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுபடுத்திக்க முடியாது.  தெளிவு இருக்க இடத்தில பேச்சு இருக்காது.”
  • இலக்குகளை அடைந்ததும் வருவது வெறுமை.
  • தீர்க்கதரிசிகள்மீதும், வீரர்கள்மீதும், கவிஞர்கள்மீதும், அறிஞர்கள்மீதும் கவிந்துள்ள தனிமையின் பாரம் தான் அவர்களுடைய சாபம்.
  • எதிர்காலமே நமக்கு வாழ்வின் அர்த்தத்தைத் தர முடியும்.  இறந்தகாலம் பிரமைகளைத் தருகிறது.  நிகழ்காலம் பிம்பங்களைத் தருகிறது.  எதிர்காலம் நம்பிக்கையை, உத்வேகத்தைத் தருகிறது  http://kuselan.manki.in/2012/09/blog-post_5.html

No comments:

Post a Comment