Sunday, July 20, 2014

ராஜினியின் விமர்சனம்

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்...... என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக...

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்... அதுவும் "பெண்களுக்கேயுரித்தான" தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்... அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை... அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை.துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
http://peddai.blogspot.in/2005/06/blog-post.html

1 comment:

  1. முற்றிலும் தகுதியற்ற விமர்சனம். விமர்சகர் தன் சொந்த அறிவின்மையே வெளிப்படுத்துகிறார். எல்லாம் தலையெழுத்து.

    ReplyDelete